இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை திடீரென ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தங்களது பார்வையில் தென்பட்டவர்களை சுட்டுத்தள்ளினர். இதனால் இஸ்ரேலில் பலி எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அதேவேளையில் பெண்கள், சிறுமிகள், முதியர்வகள் உள்ளிட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றுள்ளனர்.
பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றவர்கள் நிலை என்னவாகும் என்பதுதான் உலக நாடுகளின் கவலையாக உள்ளது. தற்போதைக்கு பேச்சுவார்த்தை இல்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே இஸ்ரேல் சிறையில் பாலஸ்தீனர்கள் உள்ளனர். இஸ்ரேல் பாலஸ்தீனர்களை விடுதலை செய்ய வேண்டும். அதேவேளையில் ஹமாஸ் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளவர்களை விடுவிக்க வேண்டும். இதற்கு கத்தார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
கத்தார் அமெரிக்காவுடன் ஒருங்கிணைந்து நடத்தி வரும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் ஹமாஸ்- இஸ்ரேல் பக்கத்தில் இருந்து இதுகுறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
இருந்தபோதிலும், தோகா மற்றும் காசாவில் உள்ள ஹமாஸ் அதிகாரிகளுடன் கத்தார் தொடர்பில் இருந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
இஸ்ரேல் காசா மீதான தாக்குதலை நிறுத்துவதற்கு இந்த பேச்சுவார்த்தை முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், காசாவில் தாக்குதலை முடிக்கும் வரை இஸ்ரேல் பேச்சுவார்த்தைக்கு வருமா? என்பது சந்தேகம்தான்.