Type Here to Get Search Results !

காவிரி பிரச்சினை: கர்நாடகத்தில் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க வேண்டும்- விவசாய சங்கங்கள் அழைப்பு

மண்டியா:

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால் அணைகள் முழுமையாக நிரம்பவில்லை. இதனால் கர்நாடகம்-தமிழகம் இடையே காவிரி நீரை பங்கிடுவது தொடர்பாக மீண்டும் பிரச்சினை எழுந்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்பேரில் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இதனை கண்டித்து கர்நாடகத்தில் விவசாய சங்கங்கள், கன்னட அமைப்பினர், எதிர்க்கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். குறிப்பாக காவிரியின் மையப்பகுதியாக மண்டியா மற்றும் மைசூரு மாவட்டங்களில் விவசாயிகள், கன்னட அமைப்பினா் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து மண்டியாவில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள விசுவேஸ்வரய்யா பூங்காவில் கடந்த 33 நாட்களாக விவசாயிகள் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 34-வது நாளாக நேற்றும் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு பல்வேறு அமைப்பினரும், சங்கங்களும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

நேற்று விவசாய சங்கத்தினரும், கன்னட அமைப்பினரும் மண்டியா டவுனில் கண்டன ஊர்வலம் நடத்தினர். அப்போது மத்திய, மாநில அரசுகள் மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். பின்னர் விசுவேஸ்வரய்யா பூங்காவுக்கு சென்று போராட்டத்தை தொடர்ந்தனர்.

மேலும் மண்டியா நகர் ஜெயசாமராஜ உடையார் சர்க்கிளில் கர்நாடக சேனா அமைப்பினா் தேங்காய் கூடுகளை காண்பித்து போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் தமிழக அரசுக்கு எதிராகவும், காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு எதிராகவும் குற்றம்சாட்டினர்.

மேலும் மண்டியா மாவட்ட மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சங்கத்தினர் மைசூரு-பெங்களூரு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் விசுவேஸ்வரய்யா பூங்காவுக்கு சென்ற அவர்கள், அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டனர். அப்போது தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அப்போது அவர்கள் கூறுகையில், காவிரி விவகாரத்தில் கர்நாடகத்துக்கு பல தகாப்தங்களாக அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு ஆதரவாக தீர்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. கன்னடர்களுக்கு பேரடி விழுகிறது. காவிரி விவகாரத்தில் நமது உரிமை பறிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கும் மாநில அரசு, விவசாயிகளின் நலனை காக்காமல் அலட்சியமாக செயல்பட்டு வருகிறது. அணைகளில் தண்ணீர் குறைவாக உள்ளதால், குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

காவிரி நீரை நம்பி உள்ள மண்டியா, மைசூரு, பெங்களூரு மக்கள் குடிநீருக்காக சிரமப்படுவார்கள். தமிழகத்துக்கு திறக்கப்படும் தண்ணீரை உடனடியாக நிறுத்த வேண்டும்.

காவிரி விவகாரத்தில் மாநிலத்தில் உள்ள 3 அரசியல் கட்சிகளும் விவசாயிகளுக்கு அநீதி இழைத்து வருகிறது. காவிரி விவகாரத்தில் நமக்கு அநீதி ஏற்படுவதால் கர்நாடகத்தில் வரும் பாராளுமன்ற தேர்தலை அனைவரும் புறக்கணிக்க வேண்டும். குறிப்பாக காவிரி படுகையில் உள்ள மக்கள் தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணிக்க வேண்டும். அப்போது தான் மத்திய அரசின் பார்வை நம் பக்கம் திரும்பும் என்றனர்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.