புதுடெல்லி:
டெல்லியின் மஹிபால்பூர் பகுதியருகே தேசிய நெடுஞ்சாலை 8-ல் நபர் ஒருவரின் உடல் கிடக்கிறது என வசந்த் குஞ்ச் வடக்கு காவல் நிலையத்திற்கு தொலைபேசி வழியே தகவல் சென்றது. அடையாளம் தெரியாத ஆணின் உடலில் காயங்கள் இருந்துள்ளன.
இதனை தொடர்ந்து, போலீசார் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்று உடலை கைப்பற்றினர். இதுபற்றி நடந்த விசாரணையில், அரியானாவின் பரிதாபாத் நகரை சேர்ந்த பிஜேந்தர் (வயது 43) என்பதும் டாக்சி ஓட்டுநராக இருந்து வந்துள்ளார் என்பதும் தெரிய வந்தது.
இதுபற்றிய வீடியோ ஒன்றும் வெளிவந்து பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அதில், அந்த நபரின் உடல் காரில் பல அடி தூரம் இழுத்து செல்லப்பட்டு உள்ளது. அந்த வீடியோ பற்றியும் விசாரணை நடந்து வருகிறது.
டெல்லியில் கஞ்சவாலா நகரில் சுல்தான்புரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் புது வருட தினத்தன்று, ஸ்கூட்டியில் தோழியுடன் சென்ற அஞ்சலி சிங் (வயது 20) என்ற இளம்பெண் மீது அதிகாலையில் கார் ஒன்று மோதி விட்டு நிற்காமல் சென்றது. அந்த காரில் அஞ்சலி பல கி.மீ. தொலைவுக்கு இழுத்து செல்லப்பட்ட சம்பவம் அப்போது பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் அந்த இளம்பெண் உயிரிழந்து விட்டார். காரில் இருந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.