Type Here to Get Search Results !

41 கனடா தூதரக அதிகாரிகளை திரும்பப்பெற இந்தியா வலியுறுத்தல்

புதுடெல்லி:

காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் 18-ந்தேதி கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சீக்கிய குருத்வாராவுக்கு அருகே மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தியாவில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை கடந்த 2020-ம் ஆண்டு இந்தியா பயங்கரவாதியாக அறிவித்திருந்தது.

இந்த சூழலில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக அந்த நாட்டு பாராளுமன்றத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்தபோதும் தங்கள் நாட்டில் இருந்த இந்திய தூதரை கனடா வெளியேற்றியது.

இதற்கு எதிர்வினையாக கனடா தூதரக அதிகாரியை நாட்டைவிட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது. இதனால் இந்தியா-கனடா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக கனடா நாட்டினருக்கு விசா வழங்குவததை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

இந்த நிலையில் வருகிற 10-ந்தேதிக்குள் இந்தியாவில் உள்ள கனடா தூதரக அதிகாரிகள் 41 பேரை திரும்ப அழைத்து கொள்ள வேண்டும் என்று கனடாவிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் தற்போது கனடா தூதரக அதிகாரிகள் 62 பேர் இருக்கும் நிலையில் அவர்களில் 41 பேரை திரும்பப்பெற அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.

தூதரக அதிகாரிகள் வெளியேறியவுடன் அவர்களின் தூதரக பொறுப்புகள் நீக்கப்படும் என்று கூறப்படுகிறது. எனினும் இந்தியா தரப்பிலோ அல்லது கனடா தரப்பிலோ இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

முன்னதாக கடந்த 21-ந்தேதி பத்திரிகையாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, "கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை விட இந்தியாவில் இருக்கும் கனடா தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எனவே பரஸ்பர முன்னிலையில் பலம் மற்றும் தரநிலை சமநிலையில் இருப்பதை உறுதிசெய்ய இந்தியாவில் உள்ள தங்கள் தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்க கனடாவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது" என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.