Type Here to Get Search Results !

விக்ரம் லேண்டர் செயல்படுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் - மயில்சாமி அண்ணாதுரை

கோவை:

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக ஜூலை 14-ம் தேதி பகல் 2.35 மணிக்கு எல்.வி.எம்.3 எம்4 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் ஏவியது. இந்த விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர் கடந்த ஆகஸ்டு 23-ம் தேதி மாலை 6.04 மணி அளவில் நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கியது.

இதையடுத்து விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியே வந்து, நிலவின் மேற்பரப்பில் ஆய்வுப் பணியை தொடங்கியது. நிலவில் 14 நாட்கள் முடிவடைந்து அங்கு இரவு தொடங்கியபோது ரோவர் மற்றும் லேண்டர் கருவிகள் உறக்க நிலையில் வைக்கப்பட்டன.

14 நாட்கள் நீடிக்கும் நிலவு இரவில், சுற்றுச்சூழல் சுமார் 200 டிகிரி உறைபனி தட்பவெப்பநிலையால் சூழப்பட்டு இருக்கும். இந்த கடுமையான காலநிலையில் தொழில்நுட்ப உபகரணங்கள் வேலை செய்வது சாத்தியமில்லை. ஆகவே தான் விஞ்ஞானிகள் அவற்றை உறக்க நிலைக்கு கொண்டு சென்றனர்.

இதற்கிடையே, நிலவில் நேற்று சூரிய உதயம் ஆரம்பித்தபோது லேண்டர் மற்றும் ரோவரை மீண்டும் செயல்பட வைக்கும் முயற்சிகள் நடைபெற்றன. ஆனால் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரில் இருந்து எவ்வித சிக்னலும் பெற முடியவில்லை. சிக்னல் பெறும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்நிலையில், முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பிரக்யானைப் பற்றி நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். ஏனென்றால் அது பலமுறை சோதனை செய்யப்பட்டு விட்டது. ஆனால் லேண்டரைப் பொறுத்தவரை, நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

லேண்டர் மூலமாக தான் தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியும். எல்லோரையும் போல் நானும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன் என தெரிவித்தார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.