Type Here to Get Search Results !

மணிப்பூரில் மீண்டும் இணைய சேவைகளுக்கு தடை

இம்பால்:

மணிப்பூரில் 4 மாதங்களுக்கும் மேலாக மெய்தி-குகி இன மக்களுக்கு இடையே கலவரம் நடந்து வருகிறது. இந்த கலவரத்தில் 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தை ஒடுக்குவதற்காக மாநில போலீசாருடன் ஆயிரக்கணக்கான மத்திய பாதுகாப்பு படை வீரர்களும் அங்கு குவிக்கப்பட்டனர். அவர்கள் பதற்றம் நிறைந்த பகுதிகளில் தொடர்ந்து ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போது அதிகரித்து வந்த கலவரத்தை கட்டுப்படுத்த மே மாதம் 3-ம் தேதி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்பட்டது. இதனால் கலவரக்காரர்களுக்கு இடையே தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. இதனால் கலவரம் படிப்படியாக குறைந்தது. இந்த சூழலில் கலவரத்தால் தடை செய்யப்பட்ட பகுதிகளில் இணைய சேவை கடந்த 23-ஆம் தேதி மீண்டும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் வன்முறை செயல்கள் தொடர்பான குறுஞ்செய்திகள் அதிகம் பகிரப்பட்டு வருவதால் மணிப்பூரில் அடுத்த 5 நாட்களுக்கு இணைய சேவைகளுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு மாணவர்கள் மர்ம நபர்களால் கொடூரமாக கொல்லப்பட்டதைத் தொடர்ந்து வெடித்த புதிய போராட்டங்களைத் தொடர்ந்து மீண்டும் இணைய சேவைகளை ஐந்து நாட்களுக்கு மணிப்பூர் அரசாங்கம் நிறுத்தி உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி ஏராளமான மாணவர்கள் தெருக்களில் இறங்கி முதல்-மந்திரி பிரேன் சிங்கின் இல்லத்தை நோக்கி பேரணி நடத்தினர். இரண்டு மாணவர்களின் சடலங்களின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

இணைய சேவைகளுக்கு தடை தொடர்பாக மணிப்பூர் அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், " வாட்ஸ் ஆப், முகநூல், இன்ஸ்டாகிராம், எக்ஸ் வலைதளம் வாயிலாக தவறான செய்திகள், வதந்திகள் பரவுவதைத் தடுக்கவும், வன்முறைக்கு காரணமாக பிற செய்திகள் பரவுவதைத் தடுத்து சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தற்காத்து கொள்வதற்கும் இணையசேவை முடக்கப்பட்டுள்ளது.

குழுக்களைச் சேர்க்கவும், வன்முறை செயல்களில் ஈடுபடவும் அதிக அளவில் குறுஞ்செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன. இது மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும். இதனால், மாலை 7.45 மணிமுதல் அக்டோபர் 1ஆம் தேதி மாலை 7.45 மணிவரை செல்போன் இணைய சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.