கொல்கத்தா:
இந்திய கடற்படைக்கு 7 போர்க்கப்பல்களை கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. கடந்த 2019-2022 காலகட்டத்தில் 5 போர்க்கப்பல்கள் தொடக்க விழாக்களை கண்டுள்ளன. இந்த வரிசையில் 6-வது போர்க்கப்பலின் கட்டுமானப் பணிகள் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் ஹூக்ளி ஆற்றங்கரையில் அமைந்துள்ள 'கார்டன் ரீச்' கப்பல் கட்டும் தளத்தில் நடந்து வந்தன.
இந்தப் பணிகள் நிறைவடைந்து தொடக்க விழாவுக்கு தயாராகி இருந்த இந்த கப்பலுக்கு ஐ.என்.எஸ். விந்தியகிரி என பெயரிடப்பட்டு உள்ளது.
149 மீட்டர் நீளமும், 6,670 டன் எடையும் கொண்ட இந்த போர்க்கப்பல் தரை, கடல், வான்வழி என 3 பகுதிகளில் இருந்தும் வரும் அச்சுறுத்தல்களையும் முறியடிக்கும் திறன் வாய்ந்தது. மேலும் எதிரியின் எல்லைக்குள்ளேயே ஊடுருவி சென்று தாக்கும் திறன் பெற்றது. இந்தக் கப்பலில் உள்ள 75 சதவீத தளவாடங்களும் உள்நாட்டு நிறுவனங்களில் தயாரிக்கப்பட்டவை என்பது கூடுதல் சிறப்பு.
இந்நிலையில், ஐ என் எஸ் விந்தியகிரி போர்க்கப்பலை ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
இந்த நவீன போர்க்கப்பல் உற்பத்தி, தற்சார்பு இந்தியாவின் அடையாளமாகவும், நாட்டின் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் அடையாளமாகவும் உள்ளது. இது, கப்பல் கட்டுமானத்தில் நமது தன்னம்பிக்கையின் அடையாளமாகும். இது போன்ற திட்டங்கள் இந்தியாவின் தன்னம்பிக்கை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கின்றன.
விந்தியகிரி கப்பலை தொடங்கி வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவின் கடல்சார் திறன்களை மேம்படுத்துவதில் இந்த நிகழ்வு ஒரு முன்னேற்றத்தைக் குறிக்கிறது.
நாம் தற்போது உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக இருக்கிறோம். வருங்காலத்தில் 3-வது இடத்தை நோக்கி நகர்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். நமது வர்த்தகப் பொருட்களின் பெரும் பகுதி கடல் வழியாகவே செல்கின்றன. இது நமது வளர்ச்சி மற்றும் நல்வாழ்வில் பெருங்கடல்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் இந்தோ-பசிபிக் பகுதியின் பாதுகாப்பு பல அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்தியாவின் கடல்சார் நலன்களைப் பாதுகாப்பதில் இந்தியக் கடற்படையின் பங்கு மிகப்பெரியது. இவ்வாறு ஜனாதிபதிதிரவுபதி முர்மு கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி, கவர்னர் ஆனந்தபோஸ் மற்றும் கடற்படை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த கப்பலில் நவீன ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை இணைத்து கடலில் வெள்ளோட்டம் விடப்படும். அதைத்தொடர்ந்து இந்த கப்பல் கடற்படையிடம் ஒப்படைக்கப்படும்.