119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் இந்த வருடம் இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே பாரத ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ், 115 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இதில் ஏழு மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே வாய்ப்பு அளிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு, கிடைக்காததால் தலைவர் ஒருவர் கண்ணீர் விட்டு அழும் காட்சி வெளியாகியுள்ளது.
ஸ்டேசன் கான்புர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு, தட்டிகோண்டா ராஜையா விண்ணப்பத்திருந்தார். ஆனால், அவருக்கு பாரத ராஷ்டிரிய சமிதி கட்சி வாய்ப்பு வழங்கவில்லை. வாய்ப்பை கிடைக்காததை பொறுத்துக் கொள்ள முடியாத அவர், மண்டியிட்டு கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் அவரது ஆதரவாளர்கள் அவரை சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர்.
கடந்த தேர்தலில் காங்கிரஸ், தெலுங்கானா ஜன சமிதி, தெலுங்கு தேசம், சிபிஐ ஆகிய நான்கு கட்சிகள் சேர்ந்து மெகா கூட்டணியை அமைத்து தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (தற்போது பாரத ராஷ்டிய சமிதி) தோற்கடிக்க முயற்சி செய்தன. ஆனால் மகா கூட்டணிக்கு போதுமான ஆதரவு கிடைக்கவில்லை.
சந்திரசேகர ராவ் கட்சி 88 இடங்களிலும், காங்கிரஸ் 19 இடங்களிலும், ஒவைசி கட்சி 7 இடங்களிலும், தெலுங்கு தேசம் 2 இடங்களிலும், பா.ஜனதா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.