அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப். இவர் கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தார். தேர்தல் முடிவை மாற்றியமைக்க சதி செய்ததாக இவர் மீது ஜார்ஜியாக உள்ளிட்ட இடங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றம்சாட்டப்பட்டது.
இதில் ஜார்ஜியா நீதிமன்றத்திலும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இருக்கும் டிரம்ப், வழக்கு தொடர்பான விசயங்களால் இடையூறு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால் சரணடைந்து ஜாமீன் பெற்று வருகிறார்.
அந்த வகையில் அமெரிக்க நேரப்படி 24-ந்தேதி இரவு, 7 மணியளவில் ஜார்ஜியா வழக்கு தொடர்பாக அட்லாண்டா சிறையில் சரணடைந்தார். பலத்த பாதுகாப்புடன் சிறையில் சரணடைந்த நிலையில், சிறை அதிகாரிகள் அவரது அடையாளங்களை குறித்தனர்.
சுமார் 20 நிமிடங்கள் பரபரப்பாக காணப்பட்டது. அதன்பின் 2 லட்சம் அமெரிக்க டாலர் பிணையாக செலுத்திய பின், விடுவிக்கப்பட்டார். விடுவிக்கப்பட்டதும், உடனடியாக விமானம் மூலம் நியூஜெர்சி புறப்பட்டார்.
இந்த வழக்கில் 25-ந்தேதிக்குள் டிரம்ப் சரணடைய வாய்ப்புள்ளது என அரசு தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டிருந்தார். அதேவேளையில், நான் சரணடையப் போகிறேன் என்று டிரம்ப் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.