மதுரை:
மதுரையில் நடந்த அ.தி.மு.க. மாநாட்டில் பொதுச் செயலாளர் எடப்பாடிபழனிசாமி பேசியதாவது:
தமிழகத்திலேயே மிகப்பெரிய கட்சி அ.தி.மு.க. தான். 31 ஆண்டு காலம் தமிழகத்தில் ஆட்சி செய்த பெரிய கட்சி அ.தி.மு.க. தான்.
தொண்டன் உழைப்பால் உருவானது அ.தி.மு.க. அ.தி.மு.க.வின் தொண்டன் என்பதே பெருமைதான். அ.தி.மு.க.வை எதிர்க்க எந்தக் கட்சியாலும் முடியாது. நாட்டுக்கு நன்மை செய்யும் கட்சியாக உள்ளது.
எந்தக் கொம்பனாலும் அதிமுகவை அழிக்க முடியாது. தொண்டனாக இருந்து உழைப்பால் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்.
அ.தி.மு.க. ஆட்சியில், புயல் வேகத்தை விட வேகமாக செயல்பட்டு நிவாரண பணிகளை மேற்கொண்டோம். மக்களை கட்டிக்காத்த அரசு என விவசாயிகள் பாராட்டினார்கள். அ.தி.மு.க. ஆட்சியை பொற்கால ஆட்சி என மக்கள் பாராட்டினார்கள்.
மதுரை மண் ராசியான மண். மதுரையில் எதை தொடங்கினாலும், தொட்டது துலங்கும். இந்த மண்ணில் துவங்கியது அனைத்தும் வெற்றிதான். வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே கட்சி அ.தி.மு.க., தான். அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தான் ஏரி, குளங்கள் தூர்வாரி தண்ணீரை சேமித்தோம்.
தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மீத்தேன் திட்டத்திற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் விவசாயிகளை அ.தி.மு.க. தான் காத்தது. விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்தோம். தி.மு.க.வுக்கு பொய்தான் மூலதனம்.
கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தது திமுக., தான். இதனால், மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சத்தின் அடிப்படையில், ஓட்டுகளை பெறுவதற்காக, அவர்களை ஏமாற்றி கச்சத்தீவை மீட்போம் என்ற பொய்யான செய்தியை ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போது, கச்சத்தீவை மீட்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்.
நீட் தேர்வில் தி.மு.க. அரசு மிகப்பெரிய நாடகத்தை அரங்கேற்றுகிறது. முதல்வர் ஸ்டாலின் நீட் தேர்வை ரத்துசெய்ய கோரி இன்று போராட்டம் நடத்துகிறார். 2010ம் ஆண்டில் மத்திய காங்கிரஸ் ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் குலாம் நபி ஆசாத். தி.மு.க.வை சேர்ந்த காந்தி செல்வன் இணை அமைச்சராக இருந்தார். அந்த காலக்கட்டத்தில்தான் நீட் தேர்வு வந்தது. இது ஆவணம். மறைக்க முடியாது. இதை மறைத்து இன்று உண்ணாவிரதம் இருக்கிறார். எவ்வளவு ஏமாற்று வேலையை தி.மு.க. செய்கிறது.
2021 சட்டசபை பொதுத் தேர்தலில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி போன்றோர் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், நீட் ரத்து செய்வதற்கு முதல் கையெழுத்து போடப்படும் என கூறினர். ஆட்சிக்கு வந்து 2 ஆண்டாகியும் நீட் தேர்வு ரத்துக்கு என்ன முயற்சி எடுத்தீர்கள். இதற்கு பதில் சொல்லுங்கள். மாணவர்களை ஏமாற்றாதீர்கள். நீட் தேர்வை கொண்டு வந்தது தி.மு.க. அதை தடுக்க போராடுவது அ.தி.மு.க. இவர்களாக கொண்டு வந்துவிட்டு அதை ரத்து செய்வதற்கு நாடகம் ஆடுகிறார்கள். தி.மு.க. அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனால் வேறு வழியில்லாமல் நாடகமாடுகின்றனர் என தெரிவித்தார்.
மதுரையில் அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு 'புரட்சி தமிழர்' என்ற பட்டம் வழங்கப்பட்டது