Type Here to Get Search Results !

குற்றால அருவி அருகே பயங்கர தீ விபத்து - 50 கடைகள் எரிந்து நாசம்

தென்காசி:

குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலுக்கு தென்புறத்தில் இருந்து மெயின் அருவி வரையிலும் சுமார் 50 தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. கோவிலுக்குச் சொந்தமான இந்த இடத்தில் ஓட்டல்கள், டீக்கடைகள், பழக்கடைகள், துணிக்கடைகள், பிளாஸ்டிக், பேன்சி பொருட்கள் விற்பனை கடைகள் போன்றவை செயல்பட்டன.

நேற்று மதியம் தற்காலிக கடைகளின் அருகில் உள்ள பிள்ளையார் கோவில் அருகில் சிலர் சமையல் செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்து பறந்த தீப்பொறியானது அருகில் இருந்த கடையில் விழுந்தது. அப்போது காற்று பலமாக வீசியதால் கடை முழுவதும் மளமளவென்று தீப்பிடித்து எரிந்தது. அருகிலுள்ள மற்ற கடைகளுக்கும் தீ வேகமாக பரவியது.

இதனால் அங்கிருந்த கடைக்காரர்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோர் அலறியடித்தவாறு ஓடினர். சிறிது நேரத்தில் அங்குள்ள டீக்கடைகள், ஓட்டல்களில் இருந்த சுமார் 4 கியாஸ் சிலிண்டர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

தகவலறிந்ததும் தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சுரண்டை ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் கடைகளின் நாலாபுறமும் இருந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

தீ விபத்தில் சுமார் 50 கடைகளில் இருந்த அனைத்துப் பொருட்களும் எரிந்து தீக்கிரையானது. சேதமடைந்த பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.2 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று கடைக்காரர்கள் தெரிவித்தனர். தீவிபத்து குறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குற்றாலம் அருவிகளில் மிகவும் குறைவான அளவே தண்ணீர் விழுவதால் குறைந்த சுற்றுலா பயணிகளே வந்திருந்தனர். இதனால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.