'சந்திரயான்-3' விண்கலம் நாளை மறுநாள் (23-ந்தேதி) மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
இதற்கான பணிகள் நாளை மாலை 5.45 மணிக்கு தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக லேண்டரை மிக மிக மெதுவாக நிலவின் மேற்பரப்புக்கு கொண்டு செல்ல வேண்டும். அந்த பணிகளில்தான் தற்போது இஸ்ரோ விஞ்ஞானிகள் இரவும் பகலுமாக ஈடுபட்டுள்ளனர்.
நேற்று நிலவுக்கு மிக நெருக்கமான சுற்றுப்பாதைக்குள் 'விக்ரம்' லேண்டர் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இந்த பணிதான் மிக மிக முக்கியமான பணியாகும். இந்த இறுதி கட்ட பணியை சவாலாக ஏற்று முடித்துள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் அடுத்த கட்ட நிறைவு பணிக்காக காத்திருக்கிறார்கள்.
'சந்திரயான்-3' திட்டத்தின் முக்கிய நிகழ்வாக உந்துகலனில் இருந்து லேண்டர் கடந்த வியாழக்கிழமை வெற்றிகரமாக விடுவிக்கப்பட்ட பிறகு அது ஒன்றன்பின் ஒன்றாக நிலவை ஒட்டிய சுற்று வட்டப்பாதையில் வலம் வந்தது. தொடர்ந்து அதன் உயரத்தை படிப்படியாக குறைத்து நிலவில் தரை இறக்குவதற்கான பணிகளில் இஸ்ரோ தற்போது தீவிரம் காட்டி வருகிறது.
அதன்படி கடந்த 18-ந்தேதி அதன் சுற்றுப்பாதை தூரம் குறைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது நிலவின் தரைப்பரப்புக்கு நெருக்கமாக குறைந்தபட்சம் 24 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 134 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்று வட்டப்பாதைக்கு லேண்டர் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையில், சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் நாள் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
தரையிறங்கும் சூழல் சாதகமற்றதாக இருந்தால் ஆகஸ்டு 27ம் தேதிக்கு ஒத்திவைக்க வாய்ப்புள்ளதாக இஸ்ரோவின் அகமதாபாத் மை இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.