புதுடெல்லி:
பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் இருந்தே மணிப்பூர் விவகாரம், எதிர்க்கட்சிகளின் முழக்கங்கள், பிரதமர் மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானங்கள் உள்ளிட்டவை காரணமாக பெரும்பாலான நாட்கள் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பிரதமர் மோடி நேற்று முன்தினம் பேசினார். அமளிக்கு இடையே வன திருத்த சட்ட மசோதா, டெல்லி நிர்வாக மசோதா உள்பட சில முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து, மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், பாராளுமன்றத்தின் மக்களவையில் ஆன்லைன் சூதாட்டம் மீது 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்புக்கான இரு மசோதாக்களை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதன்பின், ஆன்லைன் சூதாட்டம் மீது 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்புக்கான இரு மசோதாக்களுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் மக்களவையைப் புறக்கணித்த நிலையில் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தமிழக அரசு விதித்துள்ள தடைக்கு பாதிப்பில்லாத வகையில் மசோதாவில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.