வாஷிங்டன்:
அமெரிக்காவின் பிரபல பாப் பாடலாசிரியை மற்றும் பாடகி டெய்லர் ஸ்விப்ட் (33). இவர் கிராமி விருது பெற்றவர். அமெரிக்க பெடரல் ரிசர்வ் அமைப்பின் அறிக்கை ஒன்றில் அவரது பெயர் இடம்பிடிக்கும் வகையில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
ஈராஸ் டூர் என்ற தனது சுற்றுப்பயணத்தின் மூலம் 17 மாநிலங்கள், 5 கண்டங்களில் 131 கச்சேரிகள் செய்ய உள்ளார். அவரது பயணத்தால் ஏற்படும் குறிப்பிடத்தக்க பொருளாதார தாக்கத்தால் பெடரல் ரிசர்வ் வங்கியின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இந்நிலையில், அமெரிக்க பெடரல் ரிசர்வ் அமைப்பின் பீஜ் புத்தகம் எனப்படும் தற்போதைய பொருளாதார நிலைமைகள் பற்றிய அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கொரோனா தொடங்கிய காலத்திலிருந்து தற்போதுதான் பிலடெல்பியாவில் ஓட்டல் முன்பதிவுகள் உயர்ந்துள்ளது. சுற்றுலாத் துறையில் மெதுவான மீட்சியே இருந்தபோதிலும், நகரத்தில் டெய்லர் ஸ்விப்டின் இசை நிகழ்ச்சிகளுக்கு வந்த பார்வையாளர்களின் வருகை காரணமாக இந்த உயர்வு ஏற்பட்டிருக்கிறது என தெரிவிக்கிறது.
ஸ்விப்ட் இந்த ஆண்டு மே 12, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் பிலடெல்பியாவில் உள்ள 67,000 இருக்கைகள் கொண்ட அமெரிக்க கால்பந்து மைதானமான லிங்கன் பைனான்சியல் பீல்டில் 3 நிகழ்ச்சிகளை நடத்தினார். இதற்கு உலகெங்கிலும் இருந்து ரசிகர்கள் திரண்டு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு ஸ்விப்ட் காரணம் என குறிப்பிடப்படுவது இது முதல் முறை அல்ல.
கடந்த மாதம், சிகாகோவின் சுற்றுலா அமைப்பான சூஸ் சிகாகோ, ஜூன் மாத முதல் வார இறுதியில் ஓட்டல் பதிவுகள், ஸ்விப்ட் நிகழ்ச்சிகளின் காரணமாக அதற்கு முன்பிருந்த பதிவுகளை விட அதிகமாக இருந்ததாக அறிவித்தது.
தொடர்ந்து சுற்றுப்பயணம் செய்துவரும் ஸ்விப்ட், தற்போது சாதனை எண்ணிக்கையாக கருதப்படும் பில்லியன் டாலர் வசூலை எட்டக்கூடிய தூரத்தில் இருக்கிறார்.
கடந்த 2018-ம் ஆண்டில் பேர்வெல் யெல்லோ ப்ரிக் ரோட் என்ற சுற்றுப்பயணத்தால் 910 மில்லியன் டாலர் வசூலித்த புகழ்பெற்ற பாடகர் எல்டன் ஜானின் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.