புதுடெல்லி:
வட மாநிலங்களில் பெய்த பேய்மழை காரணமாக யமுனை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தலைநகர் டெல்லி வெள்ளத்தில் மூழ்கியது. டெல்லியில் சாலை எங்கும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
மேலும், டெல்லியில் யமுனை ஆற்றில் நீர்மட்டம் அபாய கட்டத்தைத் தாண்டியுள்ளது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல வலியுறுத்தப்பட்டது.
இதற்கிடையே, கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள புதுடெல்லியில் 3 நாட்களாக உயர்ந்து கொண்டே வந்த யமுனை ஆற்றின் நீர்மட்டம், தற்போது மெதுவாக குறைய ஆரம்பித்திருக்கிறது.
இந்நிலையில், பிரான்ஸ் மற்றும் யு.ஏ.இ. சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பிய நிலையில், துணைநிலை ஆளுநர் சக்சேனாவிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
அப்போது டெல்லி வெள்ள நிலவரம் குறித்தும், அபாயம் நிலைமையைத் தணிப்பதற்கான முயற்சிகளின் முன்னேற்றம் குறித்தும், மத்திய அரசின் உதவி மற்றும் ஒத்துழைப்போடு டெல்லி மக்களின் நலன் கருதி சாத்தியமான அனைத்து வேலைகளையும் செய்ய வலியுறுத்தியுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.