புதுடெல்லி:
இந்தியாவில் மதத்தின் அடிப்படையில் சிவில் சட்டங்கள் உள்ளன. திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு, சொத்துரிமை உள்ளிட்ட பல்வேறு தனி நபர் உரிமைகள் தொடர்பாக அந்தந்த நபர்களின் மதத்திற்கு ஏற்ப சிவில் சட்டங்கள் உள்ளன. தனி நபர் தான் பின்பற்றும் மதத்திற்கு ஏற்றார்போல் சிவில் சட்டங்கள் உள்ளன.
இதனிடையே, நாட்டில் உள்ள அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும் என பல்வேறு தரப்பு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர்.
மத்தியில் ஆளும் பா.ஜ.க. 2019 பாராளுமன்ற தேர்தலின்போது தேர்தல் அறிக்கையில் நாட்டில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது.
இதற்கிடையே, பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்கள், மத அமைப்புகள், அரசியல் கட்சிகள் கருத்து கூறலாம் என இந்திய சட்ட ஆணையம் கடந்த மாதம் 14-ம் தேதி பொது நோட்டீஸ் வெளியிட்டது. கருத்து தெரிவிக்க ஒரு மாதம் கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, மத்திய சட்ட ஆணையத்திற்கு இதுவரை 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பொது சிவில் சட்டம் குறித்து கருத்து தெரிவிக்க இன்றே கடைசி நாளாக இருந்த நிலையில், கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொது சிவில் சட்டம் குறித்து வரும் 28-ம் தேதி வரை பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று மத்திய சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.