திருவனந்தபுரம்:
கேரளாவின் கொட்டாரக்கரா தாலுகா மருத்துவமனையில் இருந்து திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரிக்கு நோயாளியுடன் ஆம்புலன்ஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது கொட்டாரக்கரை புலமண் சந்திப்பில் சிக்னல் வேலை செய்யாமல் இருந்துள்ளது. இதனால் போலீசார் போக்குவரத்தை சீர்செய்து கொண்டிருந்தனர். சிக்னலில் இருந்த போலீசார் ஆம்புலன்ஸ் வேனைக் கடந்து செல்லுமாறு சைகை செய்தனர்.
இதனால் ஆம்புலன்ஸ் டிரைவர் சாலையை கடக்க முயற்சித்தார். அப்போது அங்கு வந்த கேரள கல்வி மந்திரி சிவன்குட்டியின் பாதுகாப்பு வாகனம் சாலையை கடந்த ஆம்புலன்ஸ் வேன் மீது வேகமாக மோதியது.
நோயாளியுடன் சென்ற ஆம்புலன்ஸ் சாலையில் உருண்டதில் ஆம்புலன்சில் இருந்த 3 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே அப்பகுதியினர் மற்றும் போலீசார் காயமடைந்தோரை மீட்டு கொட்டாரக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
விபத்து தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.