கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலத்தில் ஜில்லா பரிஷத், பஞ்சாயத்து சமிதி மற்றும் கிராம பஞ்சாயத்து ஆகிய மூன்றடுக்கு பஞ்சாயத்து அமைப்புக்கான தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இதில் கிராம பஞ்சாயத்து அளவில் திரிணாமுல் காங்கிரஸ் 29,665 இடங்களில் வெற்றி பெற்று 1,527 இடங்களில் முன்னிலை வகித்தது.
எதிர்க்கட்சியான பா.ஜ.க. 8,021 இடங்களில் வெற்றி பெற்று 406 இடங்களில் முன்னிலை வகித்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2,472 இடங்களில் வெற்றி பெற்று 239 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 2,094 இடங்களிலும் வெற்றி பெற்று 131 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், பஞ்சாயத்து தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றதற்கு மேற்கு வங்காள மக்களுக்கு முதல் மந்திரி மம்தா பானர்ஜி நன்றி தெரிவித்தார்.
இதுதொடர்பாக மம்தா வெளியிட்டுள்ள பேஸ்புக் செய்தியில், கிராமப்புற வங்காளத்தில் அனைத்து வழிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் தான் உள்ளது. திரிணாமுல் மீதான மக்களின் அன்பு, பாசம் மற்றும் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மாநில மக்களின் இதயத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமே உள்ளது என்பதை இந்தத் தேர்தல் நிரூபித்துள்ளது என பதிவிட்டுள்ளார்.