குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் சாட்டிலைட் பகுதியில் உள்ள இஸ்கான் பாலத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒரு சொகுசு காரும் லாரியும் மோதி விபத்துக்குள்ளானது.
இதுபற்றி தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் அங்கு சென்று போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்திவிட்டு என்ன நடக்கிறது என்று வேடிக்கை பார்க்க தொடங்கினர்.
அப்போது அந்த வழியாக வேகமாக சீறிப்பாய்ந்து வந்த ஜாகுவார் கார், கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் கூடியிருந்த மக்கள் மீது மோதியது.
இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர்.
சுமார் 10 பேர் காயமடைந்து வெவ்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், விரைவான நடவடிக்கையாக அகமதாபாத் போலீசார் நேற்று நகரில் உள்ள இஸ்கான் பாலத்தில் ஒன்பது பேரை நசுக்கி கொன்ற கார் டிரைவர் தத்யா படேலை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பிறகு, குஜராத் காவல்துறை குற்றம் சாட்டப்பட்ட தத்யா படேல் மற்றும் அவரது தந்தை பிரக்னேஷ் ஆகியோரை நேற்று நள்ளிரவில் விபத்து நடந்த இடத்திற்கு அழைத்து வந்தது.
இதுதொடர்பான வீடியோ ஒன்று வைரலானது. அந்த வீடியோவில் குற்றம் சாட்டப்பட்டவர் சம்பவ இடத்திற்கு அழைத்து வரப்பட்ட பிறகு கைகளை கூப்பி மன்னிப்பு கேட்பது காணப்பட்டது.